Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

'ஆயிரம் நிலவே வா' பாடல் எஸ்.பி.பி.க்குப் பெயரையும் புகழையும் கொடுத்தது. ஆனால் அதே 'ஆயிரம் நிலவே வா' பாடலை பல நிகழ்ச்சிகளில் பாடியே நான் நல்ல பெயர் சம்பாதித்தேன் என்பது பலருக்குத் தெரியாது. அந்தப்பாடல் வெளியான நேரம் நான் சினிமாத்துறையில் ஒரு நல்ல வாழ்க்கைக்காகக் காத்துக்கொண்டிருந்த நேரம். சிறுவனாக சினிமாவில் சேர்ந்திருந்ததால் எனக்கென்று ஒரு சிறிய இமேஜ் இருந்தது. பல மெல்லிசை நிகழ்ச்சிகளில், தொடர்ந்து வந்து பாடக்கூடிய கதாநாயகர் கிடைக்காத காலம் அது. நான் எஸ்.பி.பி. பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடலைப் பாடியே நான் பெயர் வாங்கிக் கொண்டிருந்தேன். அதுமட்டுமன்றி என்னுடைய பாடலை கேட்டு மயங்கி என்னை ஒரு பெண் காதலிக்கத் தொடங்கினாள் என்றால், அந்தப் பாடல் எவ்வளவு 'பியூட்டிபுல்' என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். நல்லவேளை நான் அந்தச் சூழ்நிலையில் காதலிக்க தைரியம் இல்லாததால் அந்த பெண்ணின் வாழ்க்கை பிழைத்தது. இன்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அந்தச் சகோதரி.

எஸ்.பி.பி.யின் குரலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது. எப்படி எம்.எஸ். பாட்டைக் கேட்டு, இசை தெரியாதவனால்கூட ரசிக்க முடியுமோ, அதுபோலவே எஸ்.பி.பி.யின் குரலும் எல்லாரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதுதான்.

நான் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோது, என் குரலுக்குப் பொருந்தக்கூடியதாக பல முயற்சி செய்து இறுதியில் எஸ்.பி.பி.யின் குரல் எனக்கு மிகச் சரியாக பொருத்தமான குரலாக ரசிகர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதுமட்டுமன்றி தமிழில் எனக்குப் பின்னணி பாடும் பாலு, தெலுங்கிலும் என் படங்களுக்குப் பின்னணி பாடியதுடன் டப்பிங் வசனமும் பேசியுள்ளார். எஸ்.பி.பி. குரல் நான் பேசுவது போல இருக்கும் என்பது தெலுங்குப்பட உலகின் கருத்து.

நான் இந்தியில் 'ஏக் துஜே கேலியே' படத்தில் நடிக்கும்போது, அவரும் என்னோடு இந்தியில் நுழைந்து பிரபலமானார்.

பாலுவைப் பார்த்து நான் வியக்கும் விஷயம் வெளியிலே பிரச்சனைகளைச் சந்தித்தபோதும் பெரிதும் கோபம் வராமல் பாலுவால் எப்படி இருக்க முடிகிறது என்பது. இது யாருக்கும் புரியாத ஒன்று. பல நேரங்களில் பல நல்ல மனிதர்களையும், நல்ல சந்தர்ப்பங்களையும் என் கோபத்தால் இழந்துண்டு. ஆனால் பாலுவிடம் மாத்திரம் அந்தக் கோபம் ஒட்டிக் கொள்ளாததற்குக் காரணம் என்னவென்று இதுவரையிலும் புரியவில்லை. பாலுவிற்கு நண்பர்கள் மட்டும்தான் உண்டு. விரோதிகளே யாருமில்லை. இப்படி ஓர் ஆள் சினிமா உலகிலே இருப்பது ஒரு பெரிய சாதனைதான்.

நாங்கள் சினிமாவில் மட்டுமன்றி, இணைந்து வியாபாரம் கூட செய்திருக்கிறோம். அதில் லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்த போதிலும் சரி. இரண்டையும் ஒரே மனப்பக்குவத்துடன் எடுத்துக் கொண்டிருகிறார் பாலு.

என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஐதராபாத்தில் நடந்தது. நானும் பாலுவும் ஒரு பட விழாவிற்கு சென்றிருந்தோம். ஒரு போட்டேகிராபர் நண்பரின் வேண்டுகோளுக்க இணங்கி இருவரும் ஒரு போஸ் கொடுத்தோம். அப்பொழுது அந்த போட்டோ கிராபர் பாலுவின் தோள் மீது கை போட்டுக் கொண்டிருந்தால் நன்றாயிருக்கும் என்றார். அதற்கு பாலு என்ன பதில் சொன்னார் தெரியுமா? "என்னை மதிக்கிறார். எங்களுக்குள் இருக்கும் இந்த மரியாதையை நான் அவர் தோள் மீது கை போட்டுக்கொண்டு கொடுக்க விரும்பவில்லை. இப்பொழுது நிற்கும் போது இருக்கும் இடைவெளிதான் எங்கள் நட்பின் அஸ்திவாரம். எங்கள் நட்பை இந்தப் போஸில் பார்ப்பவர்களுக்குப் புரியாவிட்டால் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்", என்றார்.

பாலுவின் வார்த்தைகளிலிருந்த உண்மை என்னை நெகிழச் செய்தது. அப்பொழுது யோசித்துப் பார்த்தேன். இவரிடம் எங்கள் நட்பை அடையாளமாகச் சொல்லியிருக்கிறார் என்பது கூட இல்லை. நெருக்கத்தில் இந்த கை குலுக்க முடியாது. கைக்குலுக்க வேண்டுமென்றால் ஒரு அடி தள்ளி நின்றால்தான் கை குலுக்க முடியும். பாலுவின் சித்தாந்தம் இதை ஒட்டித்தான் உருவாகியிருக்க வேண்டும்.

பாலுவிடம் எனக்கு ஒரு குறையும் உண்டு. அவருடைய திறமைகளுக்கு ஏற்ப அவருக்கு இன்னும் புகழ் கிடைக்கவில்லை என்பதுதான் அது. ஆனால் அதற்கும் பாலுவின் தன்னடக்கம்தான் காரணம். சினிமா உலகில் எத்தனையோ பின்னணி பாடகர்கள் வருவார்கள் ஆனால் There can be only S.P.B. whose Name will live till Cinema lives.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles