HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

திரைப்படங்களில் இசையமைப்பு முறைகள்

              தமிழ்த் திரைப்படங்களில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பதை முன்பே பார்த்தோம். இவற்றில் சில நூறு பாடல்களே பாரம்பரிய இசை ராகங்களின் இலக்கணங்களை மீறாத வகையில் மெட்டமைத்து இசையமைக்கப்பட்டவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் ராகங்களின் சாயல் ஓரளவு இருக்கும். சில பாடல்களில் இரண்டு, மூன்று ராகங்களின் சாய்ல தென்படும். கர்நாடக இசைப்பாடல்கள் போலவே ‘ராகமாலிகை’ களாக அமைந்த திரைப்படப் பாடல்களும் ஏராளம். மீதமுள்ள ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களில் இந்திய இசை மரபுகளின் சாயல்கள் சிறிது கூட இல்லாமல், மேற்கத்திய செவ்விசை, மெல்லிசை ஆகியவற்றைத் தழுவியவையாகவே இசையமைக்கப்பட்டுள்ளன. எந்த வொரு இசை மரபிலும் சேர்க்க முடியாத ஏராளமான திரைப்பாடல்களும் மலிந்திருக்கின்றன.

              எப்படியாயினும், திரைப்பாடல்கள் இசையமைக்கப் படுவதற்கு நமது இசையமைப்பாளர்கள் மூன்று வழி முறைகளையே இதுவரை பின்பற்றி வந்துள்ளனர்.

              1930 களிலிருந்து அறுபதுகள் வரை பெரும்பாலான பாடல்கள் கர்நாடக அல்லது இந்துஸ்தானி ராகங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என்பதால், பாபநாசம் சிவன் S.V.வெங்கட்ராமன், S.M. சுப்பையா நாயுடு,C.R. சுப்புராமன், G.ராமநாதன், K.V.மகா தேவன் போன்ற இசையமைப்பாளர்கள் குறிப்பிட்ட காட்சியின் தன்மை, கதாபாத்திரங்களின் மன நிலை ஆகியவற்றிற்குப் பொருத்தமான ராகங்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பின்னர் அந்த ராகங்களை பாடலாசிரியருக்குப் பாடிக் காட்டுவார்கள் அல்லது ஹார்மோனியம், வயலின் ஆகியவற்றில் இசைத்துக் காட்டுவார்கள். அதைக் கேட்டுக் கொண்டு, அந்த ராகமெட்டுக்கு இசைவான சொற்களைக் கொண்டு பாடலாசிரியர்கள் பாடல்களை இயற்ற பாடக – பாடகியர் பாட, அப்பாடல்கள் பதிவு செய்யப்படும். அந்தக் கால கட்டத்தில் பாடலாசிரியர்களுக்கும் இசைஞானமும், இசைப் பயிற்சியும் இருந்தன. ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் அனேகமாக இப்படித்தான் உருவாயின.

              இதன் அடுத்த கட்டமாக, அதாவது M.S. விஸ்வநாதன் ராம மூர்த்தி முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்தபோது அவர்கள், இரண்டு வழிகளில் பாடல்களை எழுதச் சொல்லி கேட்டுப் பெற்றார்கள்.

              பழைய மரபின்படி ராகத்தைப் பாடிக் பாட்டியோ, அல்லது ஹார்மோனியம், வயலின் ஆகியவற்றில் வாசித்துக் காட்டியோ அந்த ராகமெட்டுக்கேற்றவாறு பாடலை எழுதச் சொல்லி, பதிவு செய்தனர்.

              பாரம்பரிய ராகத்தை முழுவதுமாகப் பின் பற்ற முடியாது என்ற நிலையில், தாங்கள் கற்பனையில் உருவாக்கிய இசை மெட்டுக்களை ஹார்மோனியம் அல்லது வயலினில் இசைத்துக் காட்டுவதுடன், ‘தத்தகாரம்’ என்ற சந்தங்களை வாயாலும் சொல்லிக் காட்டுவர். அந்த சந்தங்களுக்குப் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி, பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதித் தருவார்கள்.

              ‘தத்தகாரம்’ எனப்படும் அந்த சந்தங்கள் எப்படியிருக்கு மெனில், அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழுது, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் தான் :

              தையர தத்தன தையர தத்தன
              தையர தன்னன தாரதத்தன தன்னன்னா...

              ....சிப்பியிருக்குது முத்தும் இருக்குது
              திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி

              தத்தர தன்னன தத்தர தன்னன
              தத்தர தன்னன தாரதத்தன தன்னன்னா

              சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
              கவிதை பாட நேரமில்லடி ராசாத்தி.

இப்படியே முழுப்பாடலும் சந்தமும் பாடல் வரிகளுமாகவே மாறி மாறி வரும். எல்லாப் பாடல்களிலும் இவ்வாறு சந்தங்கள் வருவதில்லை. ஆனால் ‘தத்தகாரம்’ எனப்படும் சந்தங்கள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவற்றிற்கேற்றவாறு தான் பாடல்கள் எழுதப்படும்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தியைத் தொடர்ந்து சங்கர் – கணேஷ், இளையராஜா ஆகியோரும் இந்த முறையில்தான் ஒவ்வொரு பாடலையும் இசையமைத்து உருவாக்கினார்கள். கூடுதலாக, இளையராஜா, இசைக் குழுவில் உள்ள ஒவ்வொரு கருவியை வாசிப்பவருக்கான இசைக்குறியீடு (NOTATION) களை எழுதி வழங்கி விடுவார். அதைப் பின்பற்றித்தான் அவர்கள் அந்தந்த இசைக் கருவிகளை வாசிப்பார்கள்.

K. V.மகா தேவன் பெரும்பாலும் கவிஞர்களுக்கு முழு சுதந்திரமளித்து முதலில் அவர்கள் பாடல் எழுதிக் கொடுத்த பிறகு, அவர் மெட்டமைப்பார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாதி இப்படி, பாதி அப்படியாக இசையமைத்திருக்கிறார்கள்.

இளையராஜாவோ, அனேகமாக எல்லாப் பாடல்களுக்குமே முன் கூட்டியே தாம் தீர்மானிக்கும் மெட்டுக்களை ‘தத்தகாரமாக’ச் சொல்லித் தான் பாடல்களை எழுதச் சொல்வார்.

அடுத்ததாக, பாடல் மெட்டுக்களை ஆர்மோனியத்தில் வாசித்து அதைப் பதிவு செய்து, ஒலிநாடா காசெட்டுகளில் ஏற்றி, அதன் பிரதிகளை பல பாடலாசிரியர்களுக்கும் அனுப்பி, அவர்கள் எழுதிக் கொண்டு வரும் பாடல்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அதைப் பதிவு செய்யும் வழக்கம் வந்தது. இன்று இம்முறையில் தான் பெரும் பாலான பாடல்களும் எழுதப்பட்டு, இசை சேர்ப்பு செய்து, பதிவு செய்யப்படுகின்றன.

இதிலும் ஒருபடி முன்னேறி, A.R.ரஹ்மான் என்ற இசையமைப்பாளர், ஏதாவது வெளிநாட்டில் இருந்து கொண்டே பாடலின் மெட்டை ‘கீபோர்டு’ (Key Board) என்ற கருவி மூலம் வாசித்து அதைக் கணினியில் பதிவு செய்து ‘இணையவலை’யில் (Internet) ஏற்றி ‘வாய்ஸ் மெயிலாக’ (Voice-mail) பாடலாசிரியருக்கு அனுப்பி விடுகிறார். அதைப் பார்த்தும் கேட்டும் அந்த மெட்டுக் கேற்றவாறு பாடலெழுதி, அதைத் திரும்பவும் கணினி மூலம் பதிவு செய்து ‘இணையவலை’ மூலம் ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கிறார் பாடலாசிரியர்.

அது தமக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், அத்துடன் பிற இசைகளையும் சேர்த்துப் பதிவு செய்கிறார் A.R.ரஹ்மான்.
 
<< Previous Index