HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்
50.மாஜினியின் சபதம்
பொருட் கடவுள் திருவடி யாணை,
      பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
      தவபெய ரதன் மிசை யாணை.
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
      பணிக்கெனப் பல்விதத் துழன்ற
வீரர்,நம்நாடு வாழ்கென வீழ்ந்த
      விழுமியோர் திருப்பெய ராணை.
1

ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
      யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
      சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
      வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ?
      அத்தகை யன்பின்மீ தாணை.
2

தீயன புரிதல், முறைதவி ருடைமை,
      செம்மைதீர் அரசியல் அநீதி
ஆயவற்றென்னெஞ் சியற்கையின் எய்தும்
      அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
      உரிமைகள் சிறிதெனு மில்லேன்
தூயசீ ருடைத்தாம் சுதந்திரச் துவசம்
      துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்
3

மற்றைநாட் டவர்முன் நின்றிடும் போழ்து
      மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றியவீடு பெறற்கெனப் படைப்புற்று
      அச்செயல் முடித்திட வலிமை
அற்றதா மறுகும் என்னுயிர்க் கதனில்
      ஆர்ந்தபே ராவலி னாணை,
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
      நலனறு மடிமையின் குணத்தால்
4

வலியிழந் திருக்கும் என்னுயிர்க் கதன்கண்
      வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
      மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
      வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
      புன்சிறைக் களத்திடை யழிந்தும்
5

வேற்று நாடுகளில் அவர்துரத் துண்டும்
      மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்றகி லாராய் எம்மரு நாட்டின்
      அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
      வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
      யான்செயுஞ் சபதங்கள் இவையே;
6

கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
      கட்டளை தன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
      தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
      ஊன்றிய நம்புதல் கொண்டும்.
தடநில மிசையோர் சாதியை இறைவன்
      சமைக்கெனப் பணிப்பனேல் அதுதான்.
7

சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
      தந்துள னென்பதை யறிந்தும்,
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
      அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாத
      தம்அருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தீனுக் கதுவே
      சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்
8

கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும்
      கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
      தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
      பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபதம் இவைபுரி கின்றேன்
      ஆணைகளனைத்து முற்கொண்டே
9

என்னுட னொத்த தருமத்தை யேற்றார்.
      இயைந்த இவ்‘வாலிபர் சபை‘க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
      தத்தமா வழங்கினேன், எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
      சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
      குடியர சியன் றதா யிலக,
10

இவருடன் யானும் இணங்கியே யென்றும்
      இதுவலாற் பிறதொழில் இலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
      சந்ததஞ் சொல்லினால்,எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால், இயலும்
      அளவெலாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
      நன்கிதின் அறிந்திடப் புரிவேன்.
11

உயரும் இந்நோக்கம் நிறைவுற‘இணக்கம்’
      ஒன்றுதான் மாக்கமென் பதுவும்,
செயம்நிலை யாசச் செய்திடற் கறமே
      சிறந்ததோர் மார்க்க மென்பதுவும்,
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்திற்
      பேணுமா றியற்றிடக் கடவேன்;
அயலொரு சபையிலின்றுதோ றென்றும்
      அமைந்திடா திருந்திடக் கடவேன்.
12

எங்கள் நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
      இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
      தலைக்கொளற் கென்றுமே கடவேன்;
இங்கெனது ஆவி மாய்ந்திடு மேனும்
      இவர்பணி வெளியிடா திருப்பேன்;
துங்கமார் செயலாற் போதனை யாலும்
      இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
13

இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்;
      மெய்யிது,மெய்யிது,இவற்றை
என்றுமே தவறி யிழைப்பனேல் என்னை
      ஈசனார் நாசமே புரிக;
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க;
      அசத்தியப் பாதகஞ் சூழ்க;
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
      நித்தம்யா னுழலுக மன்னோ!
14
வேறு

பேசி நின்ற பெரும்பிர திக்கினை
      மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறியருளுக! ஏழையேற்கு
      ஈசன் என்றும் இதயத் திலகியே.
15
<< Previous Index >> Next